Thursday, April 23, 2009

ஈழத் தமிழர்களை காப்பாற்றாத இந்திய அரசின் பத்மசிறீ விருது எனக்கு வேண்டாம்: பாரதிராஜா
[வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2009, 08:07 மு.ப ஈழம்] [தமிழ்நாடு நிருபர்]

ஆடியோ




இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்காத இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பத்மசிறீ விருதை திரும்ப ஒப்படைக்கப் போவதாக தமிழ் திரைப்படத்தின் இயக்குநர் இமயமான பாரதிராஜா அறிவித்திருக்கின்றார்.

இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் சார்பில் சென்னையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் முடிவில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
உலகிற்கே தமிழினத்தை அடையாளம் காட்டியவர் பிரபாகரன்தான். தமிழ் இனத்திற்காகவும், தமிழ் மக்களுக்காகவும் கடந்த 28 ஆண்டுகளாக போராடி வருகிறார்.
ஆனால் பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் வீழ்த்துவதற்காக இந்திய அரசு புறவழியில் உதவி செய்து வருகிறது. மத்தியில் அமைந்துள்ள ஆட்சியில் அதிகார நடுவமாக விளங்கும் ஒருவர் தமது கனவுகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக 3 ஆண்டுகளாக சிறிலங்கா அரசுக்குப் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார். அவரைப் பற்றி பேசக்கூடாது என்று தமிழக காவல்துறை தடை போடுகிறது. அவரைப் பற்றி பேசினால் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது. அப்படியானால் அவர்தான் தேசமா?.

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடும் பிரபாரனை தீவிரவாதி என்று கூறுகிறார்கள். அப்படியென்றால் இந்திய விடுதலைக்காகப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை உள்ளிட்ட அனைவருமே தீவிரவாதிகள்தான்.

தமிழீழத்தில் பிச்சைக்காரர்களையே பார்க்க முடியாது. அந்த அளவுக்கு அங்குள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் அனைத்து வசதிகளையும் பிரபாகரன் செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட தமிழினம் இன்று உணவுக்கும், மருந்துக்கும் கையேந்தி பிச்சை எடுக்கின்றது.
சிறிலங்கா அரசுக்கும் மத்திய எதிராக தமிழ் மக்களிடையே இப்போது ஏற்பட்டுள்ள எழுச்சி முன்பே ஏற்பட்டிருந்தால் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.

இலங்கையில் வாழும் எங்கள் சகோதரர்களைக் காப்பாற்ற முடியாத மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் அந்த அரசு எனக்கு அளித்த பத்மசிறீ விருதை திரும்ப ஒப்படைப்பேன் என்று பாரதிராசா அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பை பலரும் வரவேற்றனர். இயக்குநர் பாரதிராஜாவுக்கு 2004 ஆம் ஆண்டு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
thanks. ww.puthinam.com

No comments: