Friday, May 22, 2009

ஈழத் தமிழ் உறவுகளுக்கு ஒரு தமிழகத்து உறவின் மடல்
திகதி: 09.05.2009 // தமிழீழம்
- பூங்குழலி

என் அன்பான உறவுகளே,
உங்களுடன் நேரடியாகப் பழகிய காலங்களில் உங்களின் உண்மையான அன்பைப் பெறும் வாய்ப்பைப் பெற்றவள் நான். அந்த அன்பை மனதில் தேக்கி வைத்து இந்த மடலினை எழுதுகிறேன்.

1980-களின் முற்பகுதியில் நான் சிறுமியாக இருந்த போது, "கற்பழிப்பு" என்ற சொல்லின் பொருள் தெரியா மலேயே அது கொடூரமானது என்பதை உணர முடிந்தது. ஏனெனில் எங்கோ நாலாம் பக்கத்தின் மூலையில் வரக் கூடிய கொலை, கற்பழிப்பு செய்திகள் தலைப்புச் செய்திகளாகத் தொடர்ந்து வந்தது அந்த காலக்கட்டத்தில்தான்.

அது ஈழத்தை முன்னிட்டு. அவைதான் கொலை போன்றே "கற்பழிப்பு" என்று ஊடகங்களால் விளிக்கப்பட்ட வன் புணர்ச்சியும் கொடூரமானது என்பதை மனதில் பதிய வைத்தன. இப்படியும் கொடூரங்கள் நடக்கக்கூடுமா என அதிர வைத்தன. அன்று எம்மைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் ஈழம் குறித்து பேசினார்கள். கூட்டங்கள், ஓவிய மற்றும் புகைப்படக் கண்காட்சிகள், கருத்தரங்கங்கள் என தெருக்கள் தோறும் ஈழ ஆதரவு நிகழ்ச்சிகள் ஏதாவது நடக்காத நாள் இருக்காது.

விடுதலைப் போராட்டம் என்றால் என்னவென்று புரியாத வயதிலேயே விடுதலை வீரர்கள் எங்களுக்கு மாமா, அண்ணன் என்று உறவானார்கள். பின்னர் அவர்களே எமக்கு நாயகர்களாகவும் ஆனார்கள். அன்று, நிச்சயம் ஒரு ஈழத் தமிழ் குடும்பமாவது நட்பாக உறவாக இல்லாத தமிழகக் குடும்பமே இருக்க இயலாது.

இன்று போல் ஈழத் தமிழ் ஏதிலிகள் எங்கோ ஒரு முகாமில் அடைக்கப் பட்டிருக்கவில்லை. எமக்கு அருகில், எம்மில் ஒருவராக வாழ்ந்து வந்தனர். பள்ளி தொடங்கி கல்லூரி வரை காலம் தோறும் என்னுடன் படித்த ஈழத் தமிழ் பிள்ளைகள் எத்தனையோ. அண்டை வீட்டாராக, உடன் படிப்பவர்களாக அவர்களுடன் பழகும் போது அவர்கள் காட்டிய அன்பை முழுமையாக உணர்ந்து சுகித்தவள்.

அதை விட அதிகமாக அவர்களின் துயரங்களை அவர்களின் வாய் மொழியிலேயே கேட்டு வெதும்பியவள். இழப்பில்லாத குடும்பமே கிடையாதோ என்று எண்ண வைக்கும் செய்திகள். நாம் எத்தனை பாதுகாப்பான வாழ்க்கை வாழ்கிறோம் என்பதை உணர வைத்த நிகழ்ச்சிகள். அண்டை நாட்டுச் சிக்கல் அவர்கள் மூலம் அண்டை வீட்டுச் சிக்கலாகப் புரிந்தது.

இன்று அவை அனைத்தும் என் மனதில் நிழலாடுகின்றன. பழகிய ஒவ்வொரு ஈழத் தமிழரின் முகமும் மனதில் வந்து போகின்றன. யார் எங்கு இருக்கிறார்கள் என தெரியாது. அதை விட வேதனை... உயிருடன் இருக்கிறார்களா என்பதற்கு எந்த உறுதியும் கிடையாது.
இதோ, 20 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இன்றும் ஈழம் பற்றி நாங்கள் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். ஈழ ஆதரவு நிகழ்வுகள் இன்றும் எம்மைச் சுற்றி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நீங்களும் சோர்வடையாது போராடிக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.

இயல்பான மனித வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்நாளில் தன் மனதுக்கு நெருக்கமானவர்களில் அதிகம் போனால் எத்தனை பேரை சாவு கொண்டு போக பார்த்திருக்க முடியும்? 5 , 10?
ஆனால் உங்கள் நிலையோ? நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. அத்தனையும் தாங்கிக் கொண்டும் தளர்வின்றிப் போராடுகிறீர்கள். எனினும்.. அண்மையில் வரும் செய்திகளை கேட்க கேட்க மனதில் கவலையை விட அதிகமாக குற்ற உணர்ச்சி எழும்புகிறது.

கொத்து கொத்தாக சாவு விழுகிறது. எங்களால் இங்கு வெறுமனே கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்தான் நடத்த முடிகிறது. உங்களின் அவலக் குரல் எங்கள் செவிகளை எட்டிவிடாதிருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்யப்படுகிறது.

நொடியில் தகவல் பரிமாற்றம் சாத்தியப்படக் கூடிய இந்த நவீன காலத்தில்தான் உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதையே வெளிவிடாமல் தடுப்பதும் அவர்களுக்கு சாத்தியப்படுகிறது.

ஆனால் புதிதாகத் தான் உங்களின் அவலம் எங்களுக்கு புரிய வேண்டுமா? 30 ஆண்டு காலத்தில் சாவு எண்ணிக்கை அதிகரித்தது தவிர வேறு என்ன மாற்றம் நடந்திருக்கிறது? செய்திகள் எட்டிதான் நாங்கள் குரல் கொடுக்க வேண்டுமா? மரணம் எனும் கோரம் முகத்தில் அறைந்தால் ஒழிய உணர்வு வராதா?

மரணத்தின் வாசம் முகர்ந்து மகிழ்பவனுக்கும், மரணத்தின் நெடி துளைத்தால் மட்டுமே அழுபவருக்கும் எனக்கு வேறுபாடு தெரியவில்லை. 25 ஆண்டு காலம்.. நாங்களும் நடத்தாத போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்கங்கள், பட்டினிப் போராட்டங்கள் இன்னும் என்னென்னவோ..

எதை விட்டு வைத்தோம்? இத்தனையும் போதாதென, இன்று முத்துக்குமார் தொடங்கி 13 பேர், அதற்கும் முன்பாக 1995-இல் அப்துல் ரவூப் என தன்னையே எரியூட்டி மாய்ந்த ஈகிகள்.

இவ்வளவுக்கும் பிறகும் எங்களால் சிங்களனையும் தடுக்க முடியவில்லை. அவனுக்கு உதவுபவர்களையும் தடுக்க முடியவில்லை. ஒருவேளை எங்கள் போராட்டத்தில் இன்னும் சற்று கூடுதலாக உண்மை வேண்டுமோ?
நீங்கள் இன்னமும் நம்பிக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.. எங்களின் போராட்டங்களும் ஆதரவும்தான் உங்களுக்கு பெரிய பலம் என்று. சாவை எதிர் நோக்கிய நிலையிலும் தளராது போராடும் உங்களின் உறுதிதான் எங்களையும் தொடர்ந்து போராடத் தூண்டுகிறது.

உங்களின் நம்பிக்கையை காப்பதற்காக இல்லை எனினும்.. எங்களின் குற்ற உணர்ச்சிக்கு பதில் சொல்லவாவது நாங்கள் போராடத்தான் வேண்டியிருக்கிறது. ஆம். எங்கள் கரங்களில் உங்களின் இரத்தம் வழிகிறது.
ஜானி, திலீபன், புலந்தி அம்மான், குமரப்பா, கிட்டு, இன்னும் எத்தனையோ போராளிகள் போதாதென்று, எத்தனை எத்தனை அப்பாவி மக்கள்.. பச்சிளம் குழந்தைகள். அமைதிப் படையாய் அழித்தது போதாதென்று இன்று ராடார்களும் நச்சு குண்டுகளும் கொடுத்து ஒட்டு மொத்தமான அழிவிற்கு காரணம் நாங்களும் தானே?

துடைக்க துடைக்க வழிகிறது இரத்தம். எத்தனை முறை கழுவினாலும் நிற்காது வழிகிறது. நச்சு குண்டுகளினாலும் இரசாயன குண்டுகளினாலும் உருகி மாண்ட குழந்தைகளின் சதைத் துணுக்குகள் எங்கள் நகக்கண்களில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. எத்தனை முறை உதறினாலும் விடாது பற்றி நிற்கின்றன.

"என்னய்யா .. இன்னும் 2 நாளுல எல்லாம் முடிஞ்சிடுமா" என்று கிரிக்கெட் ஸ்கோர் போல விசாரிக்கும் மனமற்ற சவங்களுக்கு நடுவே வாழ்வதன் பயனா இது?

முத்துக்குமாரை அப்படி ஒரு முடிவு எடுக்கத் தூண்டியது எது என இப்போது நன்றாகப் புரிகிறது. நம் வாழ்நாளில், நாம் அறிய, ஒரு மனிதப் பேரழிவிற்கு சாட்சியாக இருக்கப் போகிறோமா?

எல்லாம் முடிந்த பிறகு நமக்கு மிஞ்சுவதெல்லாம் ஒரு "கண்ணீர்க் கவிதை" தானா?மனசாட்சியின் கேள்விகள் துளைக்கின்றன. குற்ற உணர்ச்சியும் இயலாமையும் அழுத்துகின்றன.

கைகளிலிருந்து வழியும் இரத்தத்தின் ஒவ்வொரு துளியும் அமிலமாய் எரிக்கின்றது. நகக்கண்களில் ஒட்டி நிற்கும் சதைத் துணுக்குகளில் தெரியும் குழந்தைகளின் முகங்கள் மனதை நெருப்பாய் தகிக்கின்றன.
அன்பான உறவுகளே, அன் பிருந்து ஆக்கம் இல்லா கையறு நிலையில் நின்று உங்களிடம் பாவ மன்னிப்புக் கோருகிறேன்.

மன்னிப்பது உங்களால் இயலாத ஒன்றுதான். எனினும் ஒருவேளை நீங்கள் எங்களை மன்னிக்கவும் கூடும்.

ஆனால் வரலாறு ஒரு போதும் எங்களை மன்னிக்கப் போவதில்லை.

குற்ற உணர்ச்சியுடன்
தமிழக உறவு
( நன்றி - தென்செய்தி www.thenseide.com)

No comments: