Tuesday, May 26, 2009

எங்களுடைய வரலாற்றில் எங்கள் கைகளில் இரத்தம் படிந்திருப்பது இதுதான் முதற் தடவையல்ல. எம்.கே.பத்ரகுமார்
இந்திய வெளிநாட்டுச் சேவைகளில் இராஜ தந்திரியாகப் பணியாற்றியவர். இலங்கையில் அரசியற் செயலாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மே 19 அன்று மரணமானார். சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டாலும் அந்தச் சம்பவங்களின் காட்சிகள் எம்மை விட்டு அகலாதபடி தொடர்ந்து கொண்டிருக்கிறது.அச்சம்பவங்களினால் நாங்கள் பெருமளவிற்கு இயல்பற்ற நிலையை உணர்வதோடு அமைதியாக இருக்கவும் முடியாதவர்களாக உள்ளோம். ஏதோ ஒன்று எங்கோ ஓரிடத்தில் உறுத்திக் கொண்டே இருக்கிறது. எங்கள் கைகளில் இரத்தம் இருப்பதை நாங்கள் பின்னர் உணர்ந்தோம். எங்கள் கைகளில் மட்டுமல்ல, எங்கள் முழு உடலிலும், எமக்குள்ளே ஆழமாகவும் இரத்தம்.எங்களுடைய மனச்சாட்சி ‐ இந்தப் போர்க்களத்தின் பின்னால் மிஞ்சியிருப்பதெல்லாம் எங்களுடைய நாளாந்த வாழ்க்கையிலும் இரத்தம் சொட்டுச் சொட்டாக வடிவதுதான்.பிரபாகரனின் இரத்தம். இல்லை, இது பிரபாகரனின் இரத்தம் மட்டுமல்ல, 70 ஆயிரம் இலங்கைத் தமிழர்களினதும் இரத்தம். கடந்த கால் நூற்றாண்டு காலமாக வார்த்தைகளால் சொல்ல முடியாத வன்முறையால் சிதைவுற்றுப் போன இலங்கைத் தமிழ் மக்களுடைய இரத்தம்.ஓவ்வொருநாட் காலையிலும், மாலையிலும் எங்களுடைய விருப்பத்திற்குரிய கடவுளான விநாயகருக்கு நாங்கள் எல்லாவகையான பூஜைகளையும் சமயாசாரப்படி செய்யலாம் எங்களுடைய வாழ்க்கை வெற்றிமேல் வெற்றியை நோக்கி நடைபோடலாம். ஆனால் நாங்கள் சுமக்கும் வடுக்களை கழுவிவிட்டுவிட முடியாது. 70 ஆயிரம் இறந்த ஆத்மாக்களின் சாபத்திலிருந்து நாங்கள் தப்பி விட முடியாது. எங்களுடைய குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் நிச்சயமாக பரம்பரை பரம்பரையாக இந்த மாபெரும் சாபத்திற்கு ஆளாகப் போகிறோம். ஓ கடவுளே, என்ன ஒரு கசப்பான முதுசம்.நீண்ட காலத்திற்கு முன்பு நாங்கள் பிரபாகரனை உருவாக்கினோம். எங்குமில்லாதவாறான ஒருவரை நாம் தேடியெடுத்தோம். அவரிடம் நாங்கள் கவரும் விதத்தில் என்னத்தைக் கண்டெடுத்தோமென்றால், முற்றாகவே அரசியலற்ற ‐ பெருமளவிற்கு அரசியலில் அப்பாவித்தனமானவராக இருந்தார் என்பதையே. அவர் பல வழிகளில் பயந்த சுபாவமுள்ளவராக இருந்தார். அவர் ஆயுதங்கள் குறித்தும், படைப்பிரிவு குறித்தும் அதிக ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். எங்களுடைய தேவைகளுக்கு மிகப் பொருத்தமானவராகவும் அவர் இருந்தார்.இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவைப் பகைத்துக் கொண்ட, இந்தியாவுடன் உடன்பாடு கொண்டிராத ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கத்தை அவமானப்படுத்துவதற்கும் அவருக்கு ஒரு பாடம் படிப்பிப்பதற்கும் அது உதவியது. ஜே.ஆர்.ஜெயவர்த்தன பெருமளவிற்கு மேற்குலகம் சார்ந்தவராக இருந்தார்.
எங்களுடைய கொல்லைப் புறத்தில் அமெரிக்கர்களுடனும், இஸ்ரேலியர்களுடனும் அவர் விளையாடுவதனை நாங்கள் விரும்பவில்லை. ஆகவே ஜெயவர்த்தனவின் போலிக்கௌரவத்திற்கு எதிராகப் பிரபாகரனை நாங்கள் உருவாக்கினோம் பிந்த்ரன் வாலேயை உருவாக்கியது போல.பின்னர்.காலஞ் சென்றது, கொழும்பு அரசாங்கம் அந்த நேரத்தில் இருந்ததுபோல நாங்களும் மேற்குலகம் சார்ந்த, அதனை நோக்கிய, முற்றிலுமாக மாறுபட்ட ஒரு திசையில் பயணித்தோம். எங்களுடைய தற்புகழ்ச்சி கொண்ட நியூடெல்லித் தலைவர் ஜெயவர்த்தனவை வெறுத்தொதுக்கினார். பின்னர் ஜெயவர்த்தன அதிகாரத்தில் இல்லாது போனார். புதிதாகப் பதவிக்கு வந்த மென்மைப் போக்குடையவர் தன்னுடைய அரசியல் நிலைப்பாடுகள் குறித்து கடுமையான எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தவில்லை. எங்களுடைய முன்னுரிமைகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கேற்ப பிரபாகரன் கைவிடப்பட்டார். ஆனால் அதேநேரம் அவர் ஒரு முழு ஆளாக வளர்ச்சியடைந்திருந்தார் என்பதை நாங்கள் கவனிக்கத் தவறி விட்டோம். ஏங்களுடைய அச்சுறுத்தலுக்கும், அழுத்தத்திற்கும் அவர் அடிபணியாமல் எதிர்ப்புத் தெரிவித்தார். அவருடைய கொலரைப் பிடித்து இறுக்கியபோது அவர் சகிப்புத்தன்மையுடன் பின்வாங்கினார். அவர் உடனடியாகவே எங்களுடைய தலைவரைக் கொன்றொழித்தார். அத்தோடு அவர் எங்களுடைய முழு எதிரியானார்.
வெளிப்படையாக நாங்கள் இதுவரை அவருக்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லை. அவர் தன்னுடைய மக்களிடையே ஒரு முடிசூடா மன்னனாகவும், பலமிக்கவராகவும் ஏற்கெனவே உருவாகியிருந்தார்.
ஆகவே நாங்கள் காத்திருந்தோம்.
நாங்கள் நிறையச் சகித்துக் கொண்டோம். அந்தச் சகிப்புத் தன்மையை எங்களுடைய 5 ஆயிரமாண்டுகால வரலாறு எமக்குத் தந்தது. எங்களுக்கான நேரத்திற்காகக் காத்திருப்பதற்கு எங்களுடைய பிரபஞ்ச மதம் எங்களுக்கு ஒரு ஈடிணையற்ற ஞானத்தை வழங்கியிருந்தது.பின்னர் அதற்கான சந்தர்ப்பம் வந்தது. நாங்கள் பிரபாகரனைக் கொல்வதற்காக உடனடியாகவே அவருடைய எதிரிகளுடன் கைகோர்த்துக் கொண்டோம். நாங்கள் அவருடைய எதிரிகளை ஆயுத மயப்படுத்தினோம். அவர்களுக்குப் பயிற்சியளித்தோம். அவர்களுடைய திறமைகளை அதிகரித்தோம் பிரபாகரனைக் கொல்வதற்கு. நாங்கள் விவேகத்துடன் அவர்களை வழிநடத்தினோம். பிரபாகரன் தப்புவதற்கான எல்லா வழிகளையும் நாம் அடைத்தோம். பின்னர் அவருடைய கழுத்தில் கயிறு இறுகும்வரை பொறுமையோடு காத்திருந்தோம்.நம்புகிறீர்களோ இல்லையோ, இப்போது அவர் இல்லை.
அவருடைய மரணத்தில் எங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர் எப்படி? ஏப்போது இறந்தார்? என்கிற மர்மம் அவரது மரணத்தைச் சுற்றியுள்ள புதிர் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும். எங்களுக்குத் தெரிந்ததை நாங்கள் ஒருபோதும் சொல்லப் போவதில்லை. தமிழ் நாட்டுத் தேர்தலுக்குப் பின்னர்தான் இந்த மரணம் குறித்து உலகம் விழித்துக் கொண்டது. இல்லாவிட்டால் இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் எங்களுக்கு எதிராக தாறுமாறாக இருந்திருக்கும். இந்திய ஜனநாயகம் இதற்கு முற் கண்டிராத வழிகளில் சென்றிருக்கும். நாங்கள் எங்களுடைய பழிவாங்கலைத் தீர்த்துக் கொண்டோம். இப்போது எதுவுமேயில்லை. எங்களுக்கு முன்னாலுள்ள பொய்கள் என்ன? தமிழர்களுடைய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்போமென்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதுதான்.முகாம்களிலுள்ள தமிழ் மக்களை மீளக் குடியமர்த்துவதற்கும் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்வதற்கும் நாங்கள் முன்னுரிமையளிப்போமென்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. எல்லாவற்றுக்கும் பிறகு இலங்கைத் தமிழர்கள் எங்களுடைய வரலாற்றுக்;கதைகளில் ஒரு பகுதியினராக இருப்பர்.ஆனால் நாங்கள் யதார்த்தமாகவும் இருக்க வேண்டும்.
எங்களுடைய அரசியற் தலைவர்கள் வெளிப்படையாகச் சொல்லும் அரசியற் தீர்வுக்கான சந்தர்ப்பம் என்பது பூச்சியம் என்று எங்களுடைய இதயத்திற்குத் தெரியும். சிங்களவர்கள் ஒருபோதுமே அரசியற் தீர்வொன்றைக் காண்பதற்கு உலகம் உத்தரவிடுவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உள்நாட்டு விடயங்களில் தலையிடுவதாகக் கூறி எங்களால் மேற்கொள்ளப்புடும் எந்த முயற்சியையும் அவர்கள் துரிதமாகவும் தீர்மானமாகவும் நிராகரிப்பார்கள்.தேரவாத பௌத்தத்தையும், சிங்கள மக்களுடைய கௌரவத்தையும் பாதுகாப்பதற்குள்ள ஒரேயொரு நாடு இலங்கைதானென அவர்கள் நினைப்பதை நாங்கள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். அவர்களுடைய கலாசார தேசியவாதத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அவர்கள் எண்ணுகிறார்கள். இலங்கை சிங்களவர்களுடைய நாடு என்றுதான் அவர்கள் பார்க்கிறார்கள். பௌத்தத்தைத் தமது நாட்டிலிருந்து துடைத்தழித்த இந்தியர்களை எப்படியவர்கள் அனுமதிப்பார்கள். நாங்கள் சிங்களவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முயன்றால் அவர்கள் சீனாவை அல்லது பாகிஸ்தானை நெருங்குவார்கள் எங்களுடைய அழுத்தத்தைச் சமாளிப்பதற்கு. அதற்கான பலம் அவர்களிடமிருக்கிறது. சிங்களவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்களிற் சிலர் இராஜதந்திரத்திலும் ஊடக முகாமைத்துவத்திலும் மிகச் சிறந்தவர்களென்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும்.அவர்கள் தங்களுடைய நாட்டை ஒரு பௌத்த தேசமாக ஆக்குவதற்காகப் போராடுகிறார்கள்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலில் தங்களுக்கெதிரான அழுத்தம் ஏற்படுத்தப்பட்டபோது சீனாவையும், ரஸ்யாவையும் பாவித்ததன் ஊடாக கடந்த வாரம் அவர்கள் தங்களுடைய இராஜதந்திரத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்கள்.இலங்கை அரசாங்கத்தின் மீது போர்க் குற்றம் சுமத்த ஐரோப்பியர்கள் கனவு காண்கிறார்கள். என்ன ஒரு சிறுபிள்ளைத்தனம்.வரும் நாட்களில் என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறீர்களென நாங்கள் இலங்கை அரசாங்கத்திடம் கேட்டோம் ஆனால் அவர்கள் அதனை வெளியிடவில்லை. ஆனால் அவர்களிடம் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வெதுவும் இல்லையென்பது எங்களுக்குத் தெரியும்.அவர்கள் ஏற்கனவே இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் தமிழர்களுடைய பிரச்சினையைத் தீர்த்திருந்தார்கள். இந்த மாவட்டங்களில் தமிழர்கள் பெரும்பான்மையினராக இல்லை. இதேபோல பிரபாகரன் இரண்டு தசாப்தங்களாகக் கோலோச்சிய வடமாகாணத்தில் நாளையிலிருந்து சிங்களக் குடியேற்றங்களை அவர்கள் ஆரம்பிப்பார்கள். வடபிராந்தியத்தில் தமிழ் மாவட்டங்கள் இல்லாதிருப்பதை அவர்கள் உத்தரவாதப்படுத்துவார்கள். தமிழர்கள் அவர்களுடைய வடமாகாணத்திலேயே சிறுபான்மையினராக ஆக்கப்படுவார்கள். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றங்களுக்கிடையே அவர்கள் வாழ வேண்டியேற்படும். இவையெல்லாம் இலங்கையின் சமஸ்டிக் கட்டமைப்புக்குள்ளேயே நடைபெறும். இலங்கை தனது பாராளுமன்ற ஜனநாயகத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும்.
இன்னொரு தசாப்தத்திற்குப் பிறகு இந்திய உப கண்ட வரலாற்றில் தமிழ்ப் பிரச்சினையென்பது வெறும் பழங்கதையாகிவிடும். சிங்களவர்கள் இந்தியர்களின் மிகச் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். எங்களுடைய உயர் குடியினரும், அவர்களுடைய உயர் குடியினரும் ஒரே விடயங்களையே பேசுவார்கள். அவர்கள் இருவரும் நன்றாக ஆங்கிலம் பேசுவார்கள். கோல்ப் விளையாடுவார்கள். குளிர்ந்த பியர் அருந்துவார்கள். அவர்கள் நன்றாக இருக்க நாங்கள் வாழ்த்துவோம்.அப்போதும் எங்கள் கைகளில் இரத்தம் இருந்து கொண்டே இருக்கும்.அது எப்போதுமே எங்களுக்கு இடைஞ்சல் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஆனால் எங்களுடைய வரலாற்றில் எங்கள் கைகளில் இரத்தம் படிந்திருப்பது இதுதான் முதற் தடவையல்ல.இரத்தக்கறைகள் கழுவப்படப் போவதில்லை.இந்தக் கட்டுரை விடுதலைப் புலிகளின் தலைவர் மரணமானார் என்பதனை அடிப்படையாகக் கொண்டு கட்டுரையாளர் எம்.கே.பத்ரகுமாரால் எழுதப்பட்டது. இவர் இந்தியாவின் ராஜதந்திர சேவையில் நீண்டகாலம் பணியாற்றியவர். இலங்கை தொடர்பான செயலாளராகவும் புதுடெல்லியில் பணியாற்றி உள்ளார்.
நன்றி தமிழ் சகி நியூஸ்

முகப்புக்கு செல்ல இங்கு அழுத்தவும்

No comments: